

உத்தர்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரிலேயே 46 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உ.பி. அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உத்தரப்பிரதேச்தில் உள்ள கிராமங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதற்கு உ.பி. அரசு பொறுப்பேற்க வேண்டும்.
நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா, கிராமங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், மாநில அரசு வேண்டுமென்றே இதைக் கண்டு கொள்ளாமல், உயிரிழப்பைப் பற்றி கருதாமல், சேதத்தை அறியாமல் இருக்கிறது.
கரோனா தொற்றால் கிராமங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், கரோனா தொற்றை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்களைக் காணவில்லை. மாநிலத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டோம் என்று முதல்வர் ஆதித்யநாத் பொய் கூறி வருகிறார்.
ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது, ஆனால், அரசு அதிகாரிகள் பாதிப்பின் விவரங்களை மறைத்து வருகிறார்கள். கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மட்டும் 46 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காய்ச்சல், இருமலுடன் அலைகிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமோ 764 பேர்தான் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுகிறது.
கிராமங்களில் வேகமாக கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதைச் சமாளிக்க போதுமான மருந்துகள், பரிசோதனை வசதிகள், தடுப்பூசிகளை மக்களுக்காக ஏற்பாடு செய்ய பாஜக அரசால் முடியவில்லை. கிராமங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மிகமோசமாக இருக்கிறது, ஆனால், அங்கு நடக்கும் பெருந்துயரை மவுனமாக பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்