

குஜராத்தில் 2021 மார்ச் 1 முதல் மே 10ம் தேதிவரை 1.23 லட்சம் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன, உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோகில் இருவரும் நேற்று கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்த உயிரிழப்பு அதிகரிப்பு இயற்கையானது என விளக்கம் அளிக்க முடியாது, இது கரோனா பெருந்தொற்றால் மட்டுமே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதிவரை குஜராத் அரசு சார்பில் 1.23 லட்சம் பேருக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலத்தில் 58 ஆயிரம் பேருக்கான இறப்புச் சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. இந்த புள்ளிவிவரங்களை 33 மாவட்டங்களில் இருந்து பெற்றுதான் கூறுகிறோம்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 58ஆயிரத்து 68 இறப்புச் சான்றிதழ்களுக்கும், இந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 873 இறப்புச் சான்றிதழ்களுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி கரோனாவில் 4,128 பேர்தான் உயிரிழந்தார்கள் என குஜராத் அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அப்படியென்றால், (கடந்த ஆண்டு 58,023 இறப்புச்சான்றிதழ்) கூடுதலாக வழங்கப்பட்ட 65,805 இறப்புச் சான்றிதழ்களுக்கும், அரசின் அதிகாரபூர்வ கரோனா உயிரிழப்பான 4,218க்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை குஜராத் அரசும், மத்திய அரசும் விளக்க வேண்டும். எவ்வாறு இறப்புச் சான்றிதழ் அதிகரித்தது என்பதை விளக்க வேண்டும்.
இயற்கையாக உயிரிழப்பு அதிகரித்தது, வேறு காரணங்களால் அதிகரித்து என்று நீங்கள்விளக்கம் அளிக்க முடியாது. மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு அதிகரிப்புக்கு கரோனா வைரஸ்தான் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். கரோனாவில் உயிரிழந்தவர்கள் குறித்த உண்மையான கணக்கை குஜராத் அரசு மறைக்கிறது.
கங்கை நதிக்கரையில் ஏறக்குறைய 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டபோதும், நதியில் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் மிதந்துவந்தபோதும் எங்கள் சந்தேகம் உறுதியாகிவிட்டது.
கரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை மூடி மறைத்து தவறாக வெளியிடுவதில் சில மாநில அரசுகள் மீதும், மத்திய அரசும் மீதும் எங்களுக்கு வலுவான சந்தேகம் இருக்கிறது. எங்கள் சந்தேகம் உண்மையாக இருந்தால், இதுஒரு தேசிய அவமானம், தேசியஅளவிலான சோகமானது என்பதைத் தவிர இருக்க முடியாது.
இந்த நாட்டு மக்களுக்கு மத்திய அரசும், குஜராத் அரசும் விளக்கம் அளிக்க வேண்டும், காங்கிரஸ்கட்சியும் இதற்கு விளக்கமும், பதிலும் கோருகிறது. இது உண்மையாக இருந்தால், இது மிகப்பெரிய அவமானம்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒவ்வொரு மாநில அரசும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும்.
கரோனா உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் நடத்திவரும் விசாரணையின்போது, எங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அனைத்து மாநில அரசுகளும், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வழங்கிய இறப்புச்சான்றிதழ் குறித்த விவரங்களை பெற உத்தரவிடக் கோருவோம்.
இ்ந்த விவகாரத்தை நீண்டநாட்களுக்கு மறைக்க முடியாது. கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்க அமைதியான சதி, பொய்களி்ன் சதி இருக்கிறது
இவ்வாறு ப.சிதம்பரம், கோகில் தெரிவி்த்தனர்.