

நாட்டின் ஒட்டுமொத்த கரோனா நிலைமை கட்டுக்குள் வருகிறது. அதனை மேலும் கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கூறினார்.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72,907 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,890 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 2,66,098 ஆக உயர்ந்துள்ளது.
84% பேர் குணமடைந்தனர்
தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 36,73,802 ஆக குறைந்துள்ளது. இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 15.07 சதவீதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் 83.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிக நோயாளிகள் பதிவான மகாராஷ்டிரா, உ.பி., குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் சுகாதாரஉயரதிகாரிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறும்போது, “கரோனா வைரஸ் நோயின் இரண்டாவது அலை ஓரளவுகட்டுக்குள் வருவதை நாம் காண்கிறோம். சில மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரித்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, நாட்டில் கரோனா நிலைமை கட்டுக்குள் வருகிறது. அதனை மேலும் கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் கூறும்போது, “நாட்டில் இதுவரை 18.04 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 12.74 கோடிபேரும் சுகாதார ஊழியர்கள் 1.62 கோடி பேரும், முன்களப் பணியாளர்கள், 2.25 கோடி பேரும், 18-44 வயதுக்குட்பட்டோர் 42.59 லட்சம் பேரும் அடங்குவர்” என்றார்.