

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தவறுகளை விமர்சித்த அவரது சொந்தக் கட்சி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு, தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஆந்திர மாநிலம், நரசாபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. ஆளும்ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த இவர், மாநில அரசைவிமர்சித்து வந்தார். இந்நிலையில்அதிகாரிகள், அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், மற்றவர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக சதிசெய்வதாகவும், தனிப்பட்ட விதத்தில் தரக்குறைவாக பேசுவதாகவும், நாட்டுக்கு துரோகம் இழைக்கும் வகையில் நடந்துகொள்வதாகவும் மங்களகிரி காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக எம்.பி. ரகுராமை நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆந்திர சிஐடி போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்வதற்கான காரணங்கள் அடங்கிய நோட்டீஸை வீட்டின் சுவரில் ஒட்டிவிட்டு வீட்டுக்குள் சென்ற போலீஸார், தங்கள் அடையாள அட்டையை காண்பித்து, எம்.பி.யை கைது செய்தனர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக தங்கள்வாகனத்தில் ஏற்றி, குண்டூரில் உள்ள சிஐடி அலுவலகத்துக்கு இரவோடு இரவாக கொண்டு சென்றனர். எம்.பி.யின் பிறந்த நாளன்றே இந்த சம்பவம் நடந்தேறியது.
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் எம்.பி. தரப்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று காலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோருமாறு அறிவுறுத்தியது.
இதனிடையே மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு குண்டூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எம்.பி. ரகுராமை சிஐடி போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீஸார் தன்னை தாக்கியதாக தன் உடல் மீதுள்ள காயங்களை நீதிபதியிடம் எம்.பி. காண்பித்தார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.எம்.பி. ஒருவர், போலீஸாரால் தாக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.