

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுமார் 4.2 லட்சம் ரெம்டெசிவிர் மாத்திரைகள் உள்ளிட்டவை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ள வேளையில் அதனை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் அனுப்பி வருகின்றன.
ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் முறையான நடைமுறையின் மூலம் இந்தியாவுக்கு வரும் உலகளாவிய உதவிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதங்களுக்கு விரைவாக வழங்குவதற்காக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகள் தடையின்றி ஒத்துழைத்து வருகின்றன.
இந்த உதவிகள் உடனடியாகவும் பயனுள்ள வகையிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் விரிவான முறையில் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.
கரோனா நிவாரணப் பொருட்களை பெறுதல் மற்றும் ஒதுக்கீடு செய்வதை ஒருங்கிணைக்கமத்திய சுகாதார அமைச்சகத்தில் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட 12,269 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 10,796 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், 16 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள், 6,497 வென்டிலேட்டர்கள், 4.2 லட்சம்ரெம்டெசிவிர் மாத்திரைகள் உள்ளிட்டவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 27 முதல் மே 13 வரை இவை விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
18 கோடி பேருக்கு தடுப்பூசி
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதலாக இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன.
முதலில் சுகாதார ஊழியர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின்னர், தொற்றுப் பரவலின் வீரியம் அதிகரித்ததை அடுத்து படிப்படியாக அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி இயக்கம் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு 8 மணிவரை 18 கோடியே 4 லட்சத்து 29,261 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 96.27 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 66.21 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்கின்றன.
முன்களப் பணியாளர்களைப் பொறுத்தவரை, 1.43 கோடி பேருக்கு முதல் தவணை, 81.48 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கணக்கிட்டால் ஒட்டுமொத்தமாக 3.98 கோடி பேர் முழுமையாக 2தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று ஒரே நாளில் 11.3 லட்சம் பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.