

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் எரிக்கவும் இடுகாடுகள், மின் மயானங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழ்நிலையில் உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் ஏராளமான உடல்கள் மிதந்தபடி சென்றன. அவை கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் என தெரியவந்தது. இதனால் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையில், “உயிரிழப்போரின் உடல்கள் உரிய மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.
அவர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு மாநில அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கி உள்ளது. உடல்களை ஆறுகளில் வீசுவதற்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆறுகளில் உடல்களை வீசப்படுவதைத் தடுக்க, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் அந்தந்த பகுதி ராணுவ வீர்ர்கள் தீவிரரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் கிராம தலைவர்கள், கிராம மேம்பாட்டு அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படும். இக்குழுவினரும் தீவிர கண் காணிப்பில் ஈடுபடுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.