

கரோனா இரண்டாம் அலை நெருக்கடிக்கு மக்கள், அரசாங்கம் மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என சாடியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அன்றாடம் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இறப்போர் எண்ணிக்கை 4000க்கு குறையாமல் கடந்த சில நாட்களாக அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை நெருக்கடிக்கு முதல் அலை முடிந்த பின்னர் மக்கள், அரசாங்கம் மற்றும் அரசு நிர்வாகத்தினர் காட்டிய அலட்சியமே காரணம் என சாடியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் நேர்மறை சிந்தனையையும் விதைக்கும் வகையில் 'எல்லையில்லா நேர்மறை எண்ணங்கள்' (Positivity Unlimited) என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் சார்பில் இணையவழி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 'கோவிட் ரெஸ்பான்ஸ் குழுவின்' சார்பில் இது ஒருங்கிணைக்கப்படுகிறது. மே 11 தொடங்கி 5 நாட்கள் இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெறுகிறது.
இதில் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி, ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோர் பேசியிருக்கின்றனர். இந்தப் பேச்சுக்கள் அனைத்துமே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் இன்று (மே 15) ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.
அவருடைய பேச்சிலிருந்து..
இந்தியாவில் இன்று கரோனா இரண்டாவது அலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு, மக்களுடன் அரசாங்கமும் அரசு நிர்வாகமும் சேர்ந்தே காரணமாவர். அனைத்துத் தரப்பினருமே முதல் அலை முடிந்த பின்னர் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி மிகவும் அலட்சியமாக இருந்துவிட்டனர்.
இப்போது மூன்றாவது அலையும் வரும் என்கிறார்கள். இப்போது நாம் இதைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. மாறாகக் கரோனா வைரஸை எதிர்கொள்ள சரியான நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தேசம் தனது பார்வையை எதிர்காலத்தை நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் வந்துவிட்டது. நிகழ்கால அனுபவங்களைக் கொண்டு அதை நாம் கட்டமைக்க வேண்டும். நாம் இப்போது செய்த தவற்றிலிருந்துதான் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இத்தருணத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "எனது அலுவலகத்தில் எதிர்மறை சிந்தனைக்கே இடமில்லை. தோல்விக்கான சாத்தியக்கூறு என்ற வளையத்தின் மீது எப்போதுமே நாங்கள் ஆர்வம் கொண்டதில்லை. தோல்வி என்பதே நிஜத்தில் இல்லவே இல்லை" என்று அவர் கூறுவார்.
அந்த வழியில் இந்தியர்களும் நேர்மறை சிந்தனையுடன் இந்த பெருந்தொற்று மீது முழுமையான வெற்றியைக் காண வேண்டும்.
கரோனா பெருந்தொற்று மனித குலத்திற்கே மிகப்பெரிய சவால். இதை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒருவொருக்கொருவர் மாறி மாறி கைகாட்டி குற்றஞ்சாட்டும் நேரம் இதுவல்ல. அதை பின்னர் செய்து கொள்ளலாம். இப்போது அனைவரும் ஒன்றிணைவோம். கரோனா தற்காப்பு நெறிமுறைகள் ஒழுங்காகக் கடைபிடிப்போம். நோய்த் தொற்றை நேர்மறையான எண்ணத்துடன் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.