

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.
ஜாமீன் தொகையை திரட்ட, சொத்துகளை விற்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தராத வழக்கில், சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 2 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களாக டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவில் மாற்றம் கோரி, தொடரப்பட்ட மனு, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.சிக்ரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:
சஹாரா குழுமம், முதலீட்டாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வரை திருப்பித் தர வேண்டியதுள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில், ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தினால், ஜாமீன் வழங்கப்படும் என்று மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. அதில் மாற்றம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
ஜாமீன் பணத்தை திரட்ட, சுப்ரதா ராயை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்படுகிறது. புனே, அகமதாபாத், அமிர்தசரஸ், ஆஜ்மீர், ஜோத்பூர், போபால் உள்ளிட்ட 9 இடங்களில் சஹாராவுக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படுகிறது. இதற்கு ‘செபி’ அமைப்பு வழிவகுக்க வேண்டும்.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் எப்.எஸ்.நரிமன் நியமிக்கப்படுகிறார். அவர் 2 உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம். அவருக்கு அளிக்கப்படும் கட்டணம் சஹாரா கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.