

கோவாக்சின் தடுப்பூசியை மற்ற மருந்து நிறுவனங்களும் தயாரிக்க அனுமதிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது? இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் யார் பொறுப்பேற்பது? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு உரிமையை ஒரு நிறுவனத்துக்கு மட்டும் வழங்காமல் பிற நிறுவனங்களுக்கும் வழங்கிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முன்பு மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தது. ஆனால், இந்த ஆலோசனை கூறப்பட்டு 4 வாரங்களுக்குப் பின்புதான் தற்போது வேறு நிறுவனங்களும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கிடுங்கள் என காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பின் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்கு ஆளாகிய மக்கள், உயிரை இழந்த மக்களுக்கு யார் பொறுப்பேற்பது. உள்நாட்டு உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான பெரிய இடைவெளியே சிறிய கணிதத்தின் மூலம் யார் செய்யத் தவறியது?.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டும், இதுவரை மத்திய அரசால் ஒரு வெளிநாட்டு உற்பத்தியாளரைக் கண்டறியவில்லை என்பது சரிதானே. மத்திய அரரசு தொடர்ந்து மக்களிடம் பொய் கூறி வருகிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த இலக்கை நோக்கி முன்னேற நாள்தோறும் 91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், உலக அளவிலேயே 41 லட்சம் தடுப்பூசி செலுத்துவதுதான் அதிகபட்சம்.
பொய்யான வாக்குறுதிகள், காலக்கெடு நீட்டிப்பு மூலம் புத்திசாலித்தனத்தை அவமானப்படுத்தாதீர்கள். 2021ஆம் ஆண்டுக்குள் எவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும். உங்களிடம் ஏதேனும் மந்திரக்கோல் இருக்கிறதா அல்லது பொறுப்பற்ற உங்கள் திட்டம் வாக்குறுதிக்குக் காரணமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.