

கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் வீட்டுக்கு வீடு பரிசோதனை நடத்துங்கள். அதிகமான தொற்று இருக்கும் பகுதியில் சிறிய அளவில் தனிமைப்படுத்தும் முகாம் அமைப்பது இந்த நேரத்தில் அவசியம் என்று பிரதமர் மோடி மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலையில் பாதிப்பு அதிகரித்து வருவகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். பாதிப்பைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பிரதமர் மோடியிடம், கரோனா பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் சுருக்கமாகக் கூறினர்.
கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் வாரத்துக்கு 50 லட்சம் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது வாரத்துக்கு 1.30 கோடி பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் படிப்படியாக கரோனா தொற்று சதவீதம் குறைந்து வருகிறது, பாதிப்பு சரியத் தொடங்கியுள்ளது என்பதை பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
இதையடுத்து பிரதமர் மோடி, கிராமங்களில் கரோனா வைரஸ் பரவி வருவதால் அதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக கிராமப்புறங்களில் வீட்டுக்கு வீடு சென்று கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவது இந்த நேரத்தில் அவசியம் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மாநில அரசுகள் எந்தவிதமான அழுத்தமும் இன்றி, தினசரி பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், பல மாநிலங்கள் பாதிப்பு, உயிரிழப்பு குறித்து தவறான புள்ளிவிவரங்களையே தருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைப்பதற்காக ஆக்சிஜன் செறிவூக்கி வழங்கப்படும். இந்த இயந்திரங்களை இயக்கவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். மின்சாரம் தடையில்லாமல் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் கிராமப்புறங்களுக்குச் செல்லும் ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கிடவும் மோடி உத்தரவிட்டார். ஆர்டிபிசிஆர் பரிசோதனையோடு நிறுத்திவிடாமல், அதிகமான தொற்று இருக்கும் இடங்களில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையையும் நடத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.