

டெல்லியில் கடந்த மாதத்திலிருந்து தீவிரமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து அங்கு தினசரி கரோனா பாதிப்பு 6,500 ஆகக் குறைந்தது. கரோனா பாஸிட்டிவ் சதவீதம் 11 ஆகக் சரிந்தது.
டெல்லியில் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் பலனாக மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.
கடந்த மாதம் 20-ம் தேதி டெல்லியில் கரோனா பாதிப்பு 26 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது, 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆபத்தான கட்டத்தை நோக்கி டெல்லி நகர்கிறது, டெல்லியின் சுகாதார அமைப்பு முறையே சீர்குலையும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த முதல்வர் கேஜ்ராவில் தீவிரமான ஊரடங்கை அமல்படுத்தினார். படிப்படியாக ஊரடங்கை நீட்டித்துவந்த நிலையில், கரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அளித்தப் பேட்டியில் கூறியதாவது:
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 6,500 பேர் பாதி்க்கப்பட்டனர், பாதிப்பு சதவீதம் 11 ஆகக் குறைந்துள்ளது. டெல்லியில் நேற்று 8,500 பேர் பாதிக்கப்பட்டு, 12 சதவீதமாக பாதிப்பு இருந்த நிலையில் குறைந்து வருகிறது.
கரோனாவில் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் ஆக்சிஜன் செறியூக்கி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களுக்கு 200 ஆக்சிஜன் செறியூக்கிகள் வழங்கப்படும். மருத்துவர்கள் எந்த நோயாளிக்கு பரிந்துரைக்கிறார்களோ அவர்களுக்கு ஆக்சிஜன் செறியூக்கிகள் வழங்கப்படும்.
அதேபோல மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜாகி செல்லும் நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரையின்படி, ஆக்சிஜன் செறியூக்கிகள் வழங்கப்படும்.
தொடர்ந்து லாக்டவுனை தீவிரப்படுத்தி, மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் பாதிப்பு மேலும் குறையும், தொற்றை நிறுத்திவிடலாம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லியில் அமல்படுத்தப்பட்ட தீவிரமான ஊரடங்கும், மக்கள் அளித்த ஒத்துழைப்பும்தான் கரோனா பரவல் குறைய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் பி.எல். ஷெர்வால் கூறுகையில் “ கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க இன்னும் நீண்டகாலம் செல்ல வேண்டும். ஆனாலும், முன்பு இருந்த நிலையோடு ஒப்பிடுகையில் லாக்டவுன் நல்ல பலன் அளித்துள்ளது. 28 ஆயிரமாக இருந்த கரோனா பாதிப்பு 6,500 ஆகக் குறைந்துள்ளது வரவேற்கக்கூடியதுதான். ஆனால் எந்தவிதத்திலும் சமரசம் செய்யாமல் தொடர்ந்து ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஃபோர்டிஸ் மருத்துமனையின் நுரையீரல் பிரிவு மருத்துவர் ரிச்சா ஷெரீன் கூறுகையில் “ டெல்லியில் கரோனா தொற்று பெருமளவு குறைந்ததற்கு லாக்டவுன்தான் காரணம். ஏப்ரல் தொடக்கத்திலேயே லாக்டவுன் கொண்டு வந்திருந்தால், நிலைமையை மேலும் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
ஆனால், அப்போது லாக்டவுன் முடிவு எடுப்பது கடினமாக இருந்தது. ஏராளமான மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுவிட்டதால், இயல்பாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகியுள்ளது இதன் மூலம் மந்தை நோய் தடுப்பு ஆற்றால் ஏற்பட்டு வரும் காலத்தில் தொற்றைத் தடுக்க முடியும் “ எனத் தெரிவித்தார்.