

பிரதமர் மோடி குறித்து அவதூறான வகையில் சுவரொட்டிகளை டெல்லியின் பல்வேறு இடங்களில் ஒட்டிய 15 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாகச் சித்தரித்து அந்தச் சுவரொட்டியில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி சுவரொட்டிகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தச் சுவரொட்டி குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுவரொட்டி குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். ஐபிசி 188 பிரிவின் கீழ் 17 முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்து விசாரணை நடத்தி இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிய 15 பேரைக் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், “தொடர்ந்து புகார்கள் வந்தால் அடுத்தடுத்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு டெல்லி போலீஸ் நிலையத்தில் 3 முதல் தகவல் அறிக்கை, டெல்லி புறநகர், டெல்லி மேற்குப் பகுதியில் தலா 3 முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளோம். மத்திய டெல்லியில் 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 4 பேரைக் கைது செய்தோம். ரோஹினி பகுதியில் 2 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு டெல்லியில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். துவாரகா பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டனர். வடக்கு டெல்லியில் போஸ்டர் ஒட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் ஆதாரங்களைத் திரட்டிக் கைது செய்துவோம்’’ எனத் தெரிவித்தார்.