

கரோனா இரண்டாவது அலை மேற்குவங்கத்திலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளதால், அங்கு நாளை (மே 16) தொடங்கி இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 136 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மாநில அரசின் தலைமைச் செயலர் அலப்பன் பந்தோப்தயா கூறுகையில், "கரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்படுகிறது. அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் மூடப்படும். கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.
மளிகைப் பொருட்கள், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை காலை 7 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்யப்படும். பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.
தொழிற்சாலைகள் இயங்கத் தடை விதிப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள் மட்டும் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. கலாச்சார, அரசியல், மத நிகழ்ச்சிகளுகு தடை விதிக்கப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்துக்கும் அனுமதியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.