மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் கரோனா தொற்றுக்கு பலி

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | படம் உதவி: ட்விட்டர்.
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
1 min read

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதர் அஷிம் பானர்ஜி கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.

கொல்கத்தாவில் உள்ள மெடிக்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அஷிம் பானர்ஜி இன்று சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதுகுறித்து மெடிக்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் அலோக் ராய் கூறுகையில், “கரோனாவால் பாதிக்கப்பட்ட அஷிம் பானர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரிவித்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 136 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.

தனியார் வாகனங்கள், அரசுப் பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோ, புறநகர் ரயில்கள் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், பணிகளுக்குச் செல்வோர் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படுவர். பெட்ரோல் நிலையங்கள், பால், குடிநீர், மருந்துக் கடை, மின்சாரம், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையினர் வழக்கம் போல் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகம், மால்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in