

ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வந்த அந்தக் கட்சியின் மக்களவை எம்.பி. கண்ணுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜுவை தேச துரோகச் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர அரசுக்கு எதிராகவும், அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்தாதகவும் குற்றம் சாட்டி எம்.பி. கண்ணுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெரிய தொழிலதிபரான ராஜுவுக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே 2014ஆம் ஆண்டு முதலே மோதல் இருந்து வருகிறது. இதனால் 2014ஆம் ஆண்டு ராஜுவுக்குத் தேர்தலில் போட்டியிட ஜெகன்மோகன் ரெட்டி சீட் வழங்கவில்லை.
இதனால், பாஜகவில் சேர்ந்த ராஜு, பின்னர் 2018இல் விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அங்கிருந்து விலகி 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்து நரசபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், ராஜுவுக்கும் மோதல் ஏற்பட்டு கடந்த ஓராண்டாக ஜெகன்மோகன் ரெட்டியை ராஜு விமர்சித்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது 2012ஆம் ஆண்டிலிருந்து நீடித்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து தொடர்ந்து விமர்சித்த ராஜு, ஜாமீன் விதிகளை ஜெகன்மோகன் ரெட்டி மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ராஜு நேற்று தனது 59-வது பிறந்த நாளை ஹைதராபாத்தில் கொண்டாடியபோது, ஆந்திரா சிஐடி போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து சிஐடி போலீஸ் தலைமை அதிகாரியும், குண்டூர் கூடுதல் எஸ்.பி.யுமான ஆர்.விஜயா பால் கூறுகையில், “ஆந்திர அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும் எம்.பி. ராஜு தொடர்ந்து கருத்துகளைக் கூறியதற்கு ஆதராங்கள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், இரு பிரிவினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியது, அரசின் உயர் பதவியில் இருப்போர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற பிரிவுகள் மீது வழக்குப்பதிவு தேச துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.