Last Updated : 15 May, 2021 11:45 AM

 

Published : 15 May 2021 11:45 AM
Last Updated : 15 May 2021 11:45 AM

உயிரிழந்தவர்களை கண்ணியப்படுத்துங்கள்; பில் செலுத்தாதற்காக உடலை தர மறுக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை

பிரதிநிதித்துவப் படம் | படம் உதவி: ட்விட்டர்

புதுடெல்லி

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். மருத்துவமனைக்கு பில் நிலுவைத் தொகை இருக்கிறது என்பதற்காக உடலை தர மறுத்தல் கூடாது எனப் பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் கண்ணியம் காக்க உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும், தங்களின் பரிந்துரைகளை அடுத்த 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவு உயிரிழப்பு இருப்பதால், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடுகாடு இல்லாமலும், எரியூட்டும் மையம் நிரம்பி வழிவதாலும் உடல்களை வைத்துக்கொண்டு உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் உரிமைகளை மதிக்காமல், கண்ணியமாக நடத்தாமல் அவர்களை அடக்கம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கின்றன. சமீபத்தில் பிஹார், உ.பி.யில் பாயும் கங்கை நதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்தன. அந்தச் சடலங்களை அதிகாரிகள் ஏதோ துணி மூட்டையே குழியில் புதைப்பது போன்று மொத்தமாக உடல்களைப் புதைத்தனர்.

இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிஹார், உ.பி. அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இந்நிலையில், உயிரிழந்தர்களை கண்ணியமாக அடக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை அடுத்த 4 வாரங்களுக்குள் நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

''கரோனாவால் உயிரிழந்தவர்களின் உரிமைகள், கண்ணியம் காக்க மாநில அரசுகள், மத்திய அரசு புதிதாகச் சட்டம் இயற்ற வேண்டும். உயிரிழந்தவர்களை மொத்தமாக ஒரே குழியில் புதைப்பது, ஒரே இடத்தில் எரிப்பது போன்றவை உயிரிழந்தவர்களுக்கான உரிமையை மீறும் செயலாகும்.

மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஒருவர் உயிரிழந்துவிட்டால், பில் நிலுவைத் தொகைக்காக உயிரிழந்தவரின் உடலைத் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்தல் தடை செய்யப்பட வேண்டும். யாருமற்ற ஆதரவற்றோர் உயிரிழந்தால் அவர்களின் உடல்களைக் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாக்க வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாள்வது, அந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு விதமான விதிமுறை மீறல்கள் நடக்கின்றன என்று செய்திகள் வருகின்றன. ஆதலால் உயிரிழந்தவர்களின் மதிப்பும், கண்ணியமும் காக்கும் வகையில், அவர்கள் அடக்கம் செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட அளவில் டிஜிட்டல் புள்ளிவிவரத் தொகுப்பாக மாநில அரசுகள் பராமரிக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

யாரேனும் ஒருவர் உயிரிழந்தால், அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்குக் கொண்டு சென்றால் விரைவாக முடிக்கும் வகையில் போலீஸார் செயல்பட வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தினரும் உடலை விரைவாகக் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உதவ வேண்டும்.

ஆதரவற்றோர் உடல்களைத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசு, மாவட்ட, உள்ளூர் நிர்வாகம் உரிய கண்ணியத்துடன் அந்த உடல்களை அடக்கம் செய்ய வேண்டும். உடல்களை அடக்கம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஆடைகளை வழங்கிட வேண்டும்.

கரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம், உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசு ஆகியவை அறிவுறுத்தியபோதிலும அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. உயிரிழந்தவரின் உரிமைகளைக் காக்கத் தனியாகச் சட்டம் ஏதும் இந்த நாட்டில் இல்லை. அதற்காகப் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x