மாநிலங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்

மாநிலங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

மே 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி டோஸ் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை தொடங்கப்பட்டு 118 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியை நெருங்கியுள்ளது. 17 கோடி இலக்கை, 114 நாட்களில் அடைந்ததன் மூலம், தடுப்பூசி போடுவதில், உலகளவில் இந்தியா வேகமான நாடாக உள்ளது. இந்தளவு தடுப்பூசிகளை போட அமெரிக்கா 115 நாட்களும், சீனா 119 நாட்களும் எடுத்தன.

'தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசி உத்தி' கடந்த மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், 50 சதவீதத்தை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்கும். மத்திய அரசு வாங்கும் 50 சதவீத தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

மே 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு 191.99 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும். இவற்றில் 162.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 29.49 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்.

இத்தகவலை மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதன் நோக்கம், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தவறாமல் இலவச தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வது குறித்து திட்டமிடுவதுதான்.

இதற்கு முந்தைய 2 வாரத்தில், மொத்தம் 1.7 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

மேலும், மொத்தம் 4.39 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், இந்த மே மாதத்தில் கொள்முதல் செய்ய முடியும்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in