

அடுத்த 24 மணி நேரத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை, என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக தீவிரமடையும் வாய்ப்புள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் குஜராத் மற்றும் அதனையொட்டியுள்ள பாகிஸ்தான் கடற்கரையை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இந்த புயல், மே 18ம் தேதி மாலை குஜராத் கடற்கரையை நெருங்கலாம். இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில மழை பெய்து வருகிறது.
நாட்டின் மற்ற சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம் நாட்டின் எந்த பகுதியிலும் அனல் காற்று வீசவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.0 டிகிரி செல்சியஸ்க்கு மேல் விதர்பா, தெலங்கானா, மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில இடங்கள், ராஜஸ்தான், குஜராத், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் பதிவானது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், சவுராஷ்டிரா, கட்ச், கொங்கன் மற்றும் கோவா, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலையாக விதர்பா பகுதியின் சந்திரபூரில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அடுத்த 24 மணி நேரத்தில், எங்கும் அனல் காற்று வீசுவதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.