‘அந்தக் கரையில் நிச்சயம் ஏதோ புதிதாக இருக்கும்'- டைம்ஸ் குழுமத் தலைவர் இந்து ஜெயின் எழுதிய கடிதம்

இந்து ஜெயின்
இந்து ஜெயின்
Updated on
2 min read

‘டைம்ஸ்’ குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் (84), கோவிட் பெருந்தொற்றால் கடந்த மே 13-ம் தேதி, வியாழன் இரவு டெல்லியில் காலமானார். மரணம்குறித்து சில காலம் முன்பு அவர்எழுதிய கடிதம் தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

நாளிதழ், தொலைக்காட்சி அலைவரிசை, பெண்கள் மாத இதழ், திரை இதழ், இணையதளம், பண்பலை நிறுவனம் போன்றவற்றை உள்ளடக்கிய மாபெரும் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் தனது அறுபதுக்கு மேற்பட்ட வயதில் இந்து ஜெயின் அமர்ந்தார். வாழ்நாள் முழுவதும் ஆன்மிகத்தையும் அமைதியையும் முதன்மைக் குறிக்கோளாகக் கடைப்பிடித்தார். அவர் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர், பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர்.

தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பைஸாபாத்தில் கடந்த 1936 செப்டம்பர் 8-ம் தேதி அன்று இந்து ஜெயின் பிறந்தார். கடந்த 1999-ல்அவருடைய கணவர் அசோக்குமார் ஜெயினின் மறைவுக்குப் பிறகு, ‘டைம்ஸ்’ குழுமத் தலைவர்பொறுப்பை இந்து ஜெயின் ஏற்றார். கடந்த 2000-ம் ஆண்டு ‘டைம்ஸ்’ அறக்கட்டளையைத் தொடங்கினார்.

பெண்களின் தொழில் திறனைமுன்னேற்றுவதுடன் பெண் தொழில் முனைவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் அங்கமாக எப்.எல்.ஓ. அமைப்பை கடந்த 1983-ல் தொடங்கினார். உலக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் 2003-ல்தொடங்கப்பட்ட ‘ஒன்னெஸ்’ அமைப்பின் வழிகாட்டியாக விளங்கினார்.

இந்து ஜெயினின் பொதுச் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விபூஷண்’ விருது 2016-ல் வழங்கப்பட்டது.

மரணம் குறித்து இந்து ஜெயின் தன் அன்புக்குரியவர்களுக்கு ஒரு கடிதம் போல முன்பொரு முறை எழுதிய வரிகள் விசாலமான பார்வை கொண்டவை.

‘வாழும் கலையின் தொடர்ச்சிதான் மரணம் எனும் கலை. என் நண்பர்கள் என் புறப்பாட்டுக்குத் தயாராகி விட்டனர். எனக்கு நெருக்கமானவர்களுக்கும் என்னைஉண்மையிலேயே புரிந்துகொண்டவர்களுக்கும் ஆறுதலோ அழுகையோ தேவைப்படாது. எந்த ஒளிவும் மறைவும் இன்றி வாழ்க்கையை எப்படி நான் அணைத்துக் கொண்டேனோ அப்படித்தான் மரணத்தையும் தழுவிக் கொள்வேன்.

என் இறப்பு குறித்து யாருக்கும் அறிவிக்கவும் வேண்டாம். ‘எங்கே இந்து (ஜெயின்)?’ என்று யாரும் தேடக் கூடாது. எங்கே மகிழ்ச்சியும் சிரிப்பும் இருக்கிறதோ அங்கே அவர்கள் இந்துவைப் பார்க்க வேண்டும்.

வாழ்வுக்குப் பிறகான நிலை என்ன என்ற புதிர் குறித்துப் பலரும் பேசுகிறார்கள். அந்த இன்னொரு கரையில் என்ன இருக்கும், தெரியாது. ஒன்று நிச்சயம் தெரியும். அந்தக் கரையில் நிச்சயம் ஏதோ புதிதாக இருக்கும்’ என்று அந்தக் கடித உரையாடலில் கூறியிருக்கிறார் இந்து ஜெயின்.

இவர் ஆன்மிகக் குருவாக வெவ்வேறு துறவிகளை ஏற்றுக் கொண்டிருந்த போதும் ‘வாழும் கலை’ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை தனது ஆத்மார்த்த குருவாக நினைத்தார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பிறந்த நாள் அன்று, இந்து ஜெயின் உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்து ஜெயின் சமூக ஆர்வலர், மிகச்சிறந்த கொடையாளி, ஆன்மிகப் பற்றாளர் என்ற முகங் களோடு தொழிலில் இவரது தொலைநோக்கு சிந்தனையும் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரக் காரணமாக அமைந்ததாக டைம்ஸ் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைநோக்கு சிந்தனையில் இவர் உருவாக்கியதுதான் டைம்ஸ்நௌ - தொலைக்காட்சி சேனலாகும். இவரது மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர், நண்பர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in