

உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களில் பாயும் கங்கை நதியில் கடந்த வாரத்தில 100க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியிலிருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் பிஹாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கங்கை ஆற்றில் 70-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் மிகவும் மோசமான நிலையில் மிதந்தன. இது மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டம், உஜியார், குல்ஹாதியா, பாராவுளி பகுதியிலும் 50க்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்தன.
இந்த உடல்களை இரு மாநிலங்களின் அதிகாரிகளும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களில் இருந்து இந்த உடல்கள் வந்திருக்கலாம் என்று பிஹார் அதிகாரிகள் சந்தேகித்தனர். அது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்தது தொடர்பாக பிஹார், உ.பி. மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.
இந்நிலையில் கங்கை நதியில் உடல்கள் மிதந்தது தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர்கள் பிரதீப் குமார் யாதவ், விஷாக் தாக்ரே இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கங்கை நதிதான் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு உயிராகவும் பல ஆண்டுகள் இருந்து வருகிறது. கரோனா பாதித்த உடல்களாக இருந்தால், அந்த நீரைப் பயன்படுத்தும் இரு மாநிலங்களில் உள்ள கிராம மக்களும் தொற்றுக்கு ஆளாவார்கள்.
பாதி எரிந்த நிலையில் உள்ள மனித உடல்களைத் தூக்கி நதியில் வீசுவது என்பது மனிதத் தன்மையற்ற செயல். உயிரிழந்தவர்களை கண்ணியமாக புதைக்கவோ அல்லது எரியூட்டவோ இரு மாநில அரசுகளும் முறையான வசதிகளைச் செய்யவில்லை. புனிதமான கங்கை நதியை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்கவும் தவறிவிட்டனர்.
உ.பி. அரசும், பிஹார் அரசும் தங்களின் கடமையிலிருந்து தவறி, இரு மாநில அரசு அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆதலால், ஆற்றில் உடல்களைத் தூக்கி வீசியது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உருவாக்கி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். ஆற்றில் அடித்துவரப்பட்ட உடல்களை உடற்கூறு ஆய்வு செய்யவும் உ.பி. பிஹார் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.