Published : 14 May 2021 01:11 PM
Last Updated : 14 May 2021 01:11 PM

கரோனா; வென்டிலேட்டர்கள் பழுதாகி விடுகிறதா?- மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பழுதாகி விடுவதாக தகவல்கள் வெளியான நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளதாவது:

கோவிட் மேலாண்மையை திறம்பட மேற்கொள்வதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டிலிருந்து உதவி வருகிறது.

தற்போதுள்ள மருத்துவமனை கட்டமைப்பை அதிகரிக்க, மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், வென்டிலேட்டர்கள் உள்பட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது.

பிரதமர் நல நிதி மூலம் மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்கள், பஞ்சாப் பரித்கோட் பகுதியில் உள்ள ஜிஜிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அதை சரிசெய்ய தயாரிப்பு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்காததால், பயனற்ற நிலையில் கிடக்கின்றன என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஆதாரமற்ற செய்தி. இதில் முழுமையான தகவல் இல்லை.

கடந்தாண்டு தொற்று தொடங்கியபோது, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே வென்டிலேட்டர்கள் இருந்தன. நம் நாட்டில் குறைந்த அளவில் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன. வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களால், இந்தியாவுக்கு அதிகளவில் சப்ளை செய்ய முடியாத நிலை இருந்தது. அதனால் உள்நாட்டு தயாரிப்பாளர்கள், இந்தியாவில் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.

பெரும்பாலான நிறுவனங்கள், முதல் முறையாக வென்டிலேட்டர்கள் தயாரித்தன. அவை நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே விநியோகிக்கப்பட்டன.

ஜிஜிஎஸ் மருத்துவமனையில், ஏஜிவிஏ வழங்கிய 80 வென்டிலேட்டர்களில், 71 வென்டிலேட்டர்கள் பழுது என செய்தி வெளியாகியுள்ளது.

ஜிஜிஎஸ் மருத்துவமனைக்கு 88 வென்டிலேட்டர்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்(பெல்) வழங்கியது. 5 வென்டிலேட்டர்கள் ஏஜிவிஏ நிறுவனம் வழங்கியது. இந்த வென்டிலேட்டர்களை வெற்றிகரமாக பொருத்தியபின், மருத்துவமனை நிர்வாகம் சான்றளித்துள்ளது.

பத்திரிக்கைகளில் வெளியானது போல் பெரும்பாலான வென்டிலேட்டர்கள் பழுதாகவில்லை என பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெல் இன்ஜினியர்கள், ஜிஜிஎஸ் மருத்துவமனைக்கு பல முறை சென்று சிறு சிறு தவறுகளை சரி செய்து, ஊழியர்களுக்கு செய்முறை விளக்கமும் அளித்துள்ளனர்.

ஜிஜிஎஸ் மருத்துவமனையின் ஆக்ஸிஜன் பைப் லைனில் போதிய அழுத்தம் இல்லாதது, பிரச்சனைக்கு காரணம் என தெரியவந்தது. மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்ற வேண்டிய சென்சார், பாக்டீரியா பில்டர் போன்ற பாகங்கள் விதிமுறைப்படி மாற்றப்படவில்லை.

பெல் இன்ஜினியர்கள் மீண்டும் சென்று 5 வென்டிலேட்டர்களை சரி செய்துள்ளனர். பஞ்சாப்பில் உள்ள மருத்துவமனைகள், வென்டிலேட்டர் நிறுவனங்களின் வழிமுறைகளை சரியாக பின்பற்றாமல், பிரச்சனைகளை அடிப்படை ஆதாரமின்றி எழுப்புகின்றன.

பெல் நிறுவனம் தொடர்ச்சியாக தனது தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என தெளிவுபடுத்தப்படுகிறது. வென்டிலேட்டர் நிறுவனங்களின் உதவி எண்கள், பிரத்தியேக இ-மெயில் முகவரிகள் ஆகியவை, கடந்த 9ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் தெரிவித்துள்ளது.

வென்டிலேட்டர்களின் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரிசெய்ய, இத்தகவல் மாநில வாரியாக சிறப்பு அதிகாரிகளுடன் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x