Last Updated : 14 May, 2021 12:20 PM

 

Published : 14 May 2021 12:20 PM
Last Updated : 14 May 2021 12:20 PM

இந்தியாவுக்கு அடுத்து வர உள்ள 5 தடுப்பூசிகள் என்ன? ஆகஸ்ட்- டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்: மத்திய அரசு நம்பிக்கை

நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். ஒட்டுமொத்த மக்களுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். மக்களை நோய்த் தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட் இரு தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்து, அந்தத் தடுப்பூசிகளும் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. ஆனால், மக்களுக்கு இன்னும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்படவில்லை, சந்தையிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

5 மாதங்களில் கிடைக்க உள்ள தடுப்பூசிகள்

''ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து இந்தியச் சந்தையில் கிடைக்கும். தடுப்பூசி என்பது முக்கியமான ஒன்று. ஆனால், அதைத் தயாரிக்கவும், மக்களுக்கு கிடைக்கவும் சிறிது காலம் ஆகும். அதனால்தான் நாங்கள் முதலில் கரோனாவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசியை இலவசமாகச் செலுத்தினோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள மக்கள்தொகை முழுமைக்கும் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். அனைவருக்கும் தடங்கல் இன்றி தடுப்பூசி கிடைக்கும். இந்த 216 கோடி தடுப்பூசியில் 75 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 55 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.

இது தவிர 5 புதிய தடுப்பூசிகள் வர உள்ன. பயோலாஜிக்கல் இ, ஜைடஸ் கெடில்லா, சீரம் நிறுவனத்தின் நோவாக்ஸின், பாரத் பயோடெக்கின் மூக்கில் செலுத்தும் தடுப்பூசி, ஜென்னோவா, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் வந்துவிடும்.

இதில் பயோலாஜிக்கல் -இ 30 கோடி தடுப்பூசி, கெடில்லா 5 கோடி தடுப்பூசி, நோவாக்ஸின் 20 கோடி தடுப்பூசி, பாரத் பயோடெக் தடுப்பூசி 10 கோடி, ஜென்னோவா 6 கோடி தடுப்பூசி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 15.6 கோடி ஆகியவை கிடைக்கும்.

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், மாடர்னா, பைஸர் ஆகிய நிறுவனங்களுடனும் மத்திய உயிர்தொழில்நுட்பம் மற்றும் வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் வந்து இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கப் பேசி வருகிறோம்.

அவர்களின் ஒவ்வொரு முயற்சியையும் ஆதரிப்போம். இதுவரை மத்திய அரசு 35.6 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்தவற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 6.6 கோடி தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு பால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x