Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் 216 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி உற்பத்தி: மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் 216 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின்நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் நேற்று கூறியதாவது:

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், உலகசுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களுடன் மத்திய அரசின் பயோடெக்னாலஜி உள்ளிட்ட துறைகள்பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அமெரிக்காவில் இதுவரை 26 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 18 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக தடுப்பூசி போட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர்வரையிலான காலத்தில் இந்தியாவில் 216 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும். அப்போது தடுப்பூசி திட்டம் மேலும் விரைவுபடுத்தப்படும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் 300 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறும்போது, "12 மாநிலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 8 மாநிலங்களில் 50,000-க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

உள்நாட்டு கரோனா தடுப்பூசிகள்

புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியையும் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் கோவேக்சின் கரோனா தடுப்பூசியையும் உற்பத்தி செய்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்த விவரங்களை இந்த உள்நாட்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் அளித்துள்ளன.

பாரத் பயோடெக்கின் முழு நேர இயக்குநர் டாக்டர்வி கிருஷ்ண மோகன் கூறும்போது, "கோவாக்சின் உற்பத்தி ஜூலை மாதம் 3.32 கோடி குப்பிகளாக இருக்கும். இது ஆகஸ்ட் மாதத்தில் 7.82 கோடி குப்பிகளாக உயர்த்தப்படும்" என்றார்.

10 கோடியாக அதிகரிக்கும்

சீரம் நிறுவனத்தின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் கூறும்போது, "ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் நிறுவனத்தின் உற்பத்தி 10 கோடி குப்பிகளாக உயர்த்தப்படும்" என்றார்.

உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளுக்கு மத்திய அமைச்சரவை குழு பார்மசூடிகல்ஸ் இணைச் செயலர் ரஜ்னீஷ் டிங்கல், மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் டாக்டர் மன்தீப் பண்டாரி ஆகியோருடன் நேரடியாக சென்று பார்வையிட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x