Last Updated : 14 May, 2021 03:12 AM

 

Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

ஐந்தே நாட்களில் கரோனாவை வென்ற103 வயது சுதந்திரப் போராட்ட வீரர்

கரோனா தொற்றுக்கு ஆளான 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் துரைசுவாமி அதை ஐந்தே நாட்களில் வென்று வீடு திரும்பியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த எச்.எஸ்.துரைசுவாமி1918-ம் ஆண்டு பிறந்தவர். காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுசுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். நாடு சுதந்திரமடைந்த பிறகு தியாகி துரைசுவாமி ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம்அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குநரும், முன்னாள் பிரதமர்தேவகவுடாவின் மருமகனுமான மஞ்சுநாத், துரைசுவாமிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கினார்.இதையடுத்து பூரணமாக குணமடைந்த துரைசுவாமி நேற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவர் மஞ்சுநாத் கூறும்போது, “கரோனா தொற்றுக்கு ஆளான போதும் தியாகி துரைசுவாமி மற்றவர்களைப் போல அச்சம் அடையவில்லை. காய்ச்சலும், உடல் சோர்வும் தீவிரமாக இருந்த போதும் அவர் துவண்டுவிடவில்லை.தகுந்த நேரத்தில் துரைசுவாமிக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டதால் தொற்று பரவுவது தடுக்கப்பட்டது.

இதனால் அவரால் கரோனாவை எளிதாக வெற்றிக்கொள்ள முடிந்தது. அவர் வீட்டுக்கு போகும் போது,“இனி நீங்கள் சுதந்திர போராட்ட வீரர் மட்டும் அல்ல. கரோனா எனும்கொடிய வைரஸையும் வென்ற வீரர் என்றேன்” என்றார்.

நானே சிறந்த எடுத்துக்காட்டு

குணமடைந்த துரைசுவாமி கூறும்போது, “கரோனா ஒன்றும் கொடிய பேய் அல்ல. அதனை பார்த்து பயப்பட தேவையில்லை.

வைரஸ் தாக்கிய உடன் தகுந்தமருத்துவ சிகிச்சையும், நல்லஆலோசனையும் கிடைத்தால் அந்த வைரஸை கொன்று விடலாம். என்னை பொறுத்தவரை மருந்து என்னை குணமாக்கியதை விட எனது தன்னம்பிக்கை தான் என்னை குணமாக்கியது. 103 வயதான நானே, ஐந்தே நாட்களில் கரோனாவை வென்றிருக்கிறேன் என்பது மற்றவர்களுக்கு சிறந்தஎடுத்துக்காட்டு. எனவே எத்தகையசிக்கல் வந்தாலும் தன்னம்பிக்கையோடு கரோனாவோடு போராடுங்கள் என்பதே என்னை விட இளையவர்களுக்கு நான் கூறும் செய்தி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x