Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கரோனா தொற்றில் இறந்த ஆதரவற்ற உடல்களுக்கு சொந்த செலவில் தகனம்: திருப்பதி இஸ்லாமிய குழுவினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

ஆதரவற்றோரின் சடலங்களுக்கு அவரவர் மத சம்பிரதாயப்படி கடந்த ஓராண்டாக இறுதிச்சடங்கு செய்யும் திருப்பதி இஸ்லாமிய முற்போக்கு குழுவினரை திருப்பதி காவல் கண்காணிப்பாளர் வெங்கட அப்பல நாயுடு நேற்று பாராட்டினார்.

திருப்பதி

கரோனா தொற்றால் மரண மடைந்தவர்களை கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகளாலும் நெருங்க முடிவதில்லை. நோய்த் தொற்று அபாயத்தால் இறந்தவர் களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க அனுமதிக்கின்றனர்.

இப்படியிருக்கையில், திருப்பதியில் கோவிட்-19 இஸ்லா மிய முற்போக்கு குழு ஒராண்டாக கரோனா தொற்றால் இறந்த ஆதரவற்றோரின் உடல்களை மயானத்துக்கு கொண்டு சென்று, அவரவர் சம்பிரதாயப்படி அடக்கம் அல்லது தகனம் செய்து வருகிறது. இப்பணியை தங்கள் சொந்த செலவில் இக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இதை அறிந்த திருப்பதி நகர்ப்புற காவல் கண்காணிப்பாளர் வெங்கட அப்பல நாயுடு, இஸ்லாமிய முற்போக்கு குழுவினரை நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் அப்பல நாயுடு பேசும்போது, “கரோனாவால் உயிரிழந்தவர்களை தொடும் அளவிற்கு கூட நாம் இல்லை. ஆனால், இவற்றை எல்லாம் மீறி, ஒருமித்த மனிதாபிமான உள்ளங்கள் ஒன்றுசேர்ந்து, மதங்களை கடந்து கரோனா சடலங்களை தொட்டு, தூக்கி சடங்குகள் நடத்துகிறார்கள் என்றால், இதுபோன்றவர்களின் மூலமாக நான் கடவுளை பார்க்கிறேன்” என்றார். நிகழ்ச்சியில் குழு தலைவர் ஷேக் இமாம் சாஹிப், கவுரவத் தலைவர் எஸ்.கே.பாபு உள்ளிட்டோரும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x