

ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு செலவாகும் புல்லட் ரயில் திட்டம் ஏழை நாடான நமக்கு தேவையா? இத்திட்டத்தின் பின்னால் உள்ள பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட காரணத்தை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் ஆகியவற்றினால் லட்சக்கணக்கானோர் பலியாகும் நம் நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் புல்லட் ரயில் திட்டம் அவசியமா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.
ஒரு சிறிய தூரத்துக்காக இயக்கப்படும், பெரிய முதலீட்டில் இத்தகைய புல்லட் ரயில் திட்டத்தினால் பயனடையக் கூடிய மக்கள் தொகுதியினர் யார்? அமெரிக்கா போன்ற பணக்கார நாட்டிலேயே புல்லட் ரயில் கிடையாது. போட்டி நிறைந்த இன்றைய சந்தை உலகில் குறைந்த கட்டண விமானச் சேவைகள் மூலம் அவர்களே திக்குமுக்காடி வருகின்றனர்.
விவசாயிகளையும், ஏழைமக்களையும் புறக்கணித்து ஏன் இந்த புல்லட் ரயில் திட்டம்? வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுக்கு பட்ஜெட் தொகை ஒதுக்கீட்டை குறைக்கும் மத்திய அரசின் முன்னுரிமைகள் தவறான பாதையில் செல்கிறது, ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை நோக்கி அதன் திட்டங்கள் உள்ளன.
மேலும், ரயில்வே துறையை நடத்த கூடிக்கொண்டே செல்லும் செலவுகளும், சரக்கு மற்றும் பயணிகள் சேவைகள் மூலம் வருவாய் குறைந்து வருவதும் ரயில்வே துறை தனது இருப்புக்கே போரட வேண்டியுள்ள நிலைமை தொடரும் போது புல்லட் ரயில் திட்டம் எதற்காக?
புல்லட் ரயில் திட்டத்துக்காக முதலீடு செய்யும் தொகையை ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக செலவு செய்து கோடிக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்குமாறு செய்யலாம்.
நான் இக்கடிதத்தை ஆழமான அக்கறை மற்றும் கவலையுடன் எழுதுகிறேன், ஏனெனில் ரயில்வே துறை நிதிநிலைமைகள் வீழ்ச்சியடைந்து வருகிறது. தனது இருப்புக்கே போராட வேண்டிய சூழ்நிலையில் வெள்ளை யானை மேல் ரயில்வே துறை பயணம் செய்ய முடிவெடுத்திருப்பது முரண்பாடான நிலையையே எனக்கு தெரிவிக்கிறது.
சாம் பிட்ரோடா கமிட்டி, ஏ.பி.டி ஆகிய சிறப்பு தடங்கள் அதிக அளவு எடைகளை சரக்கு ரயில்கள் ஏற்றிச் செல்லும் விதமாகவும், பயணிகள் ரயிலின் வேகம் மணிக்கு 160கிமீ முதல் 200 கிமீ வரை செல்லுமாறும் புதுப்பிக்கப் படவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. அதே போல் தானியங்கி பிளாக் சிக்னல்கள், ஜிஎஸ்எம் அடிப்படையிலான மொபைல் ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் ஆகியவை ஏ மற்றும் பி தடங்களில் உடனடியாக அமல்படுத்தப் படவேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.