ரெம்டெசிவிர் மருந்தை விநியோகிக்காத நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் அனுப்பாவிடில் நடவடிக்கை என எடியூரப்பா எச்சரிக்கை

ரெம்டெசிவிர் மருந்தை விநியோகிக்காத நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் அனுப்பாவிடில் நடவடிக்கை என எடியூரப்பா எச்சரிக்கை
Updated on
1 min read

மத்திய அரசின் ஆணைப்படி கர்நாடகாவுக்கு வழங்க வேண்டிய ரெம்டெசிவிர் மருந்தை விநியோகிக்காத மருந்து நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களைக் காப்பாற்ற தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ரெம்டெசிவிர் மருந்தை பொறுத்தவரை கர்நாடகாவுக்கு தினமும் 35 ஆயிரம் ‘டோஸ்’ தேவைப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 1ம் தேதி ஜுபிலண்ட் நிறுவனம் 32 ஆயிரம் டோஸ் மருந்தும், சிப்லா நிறுவனம் 30 ஆயிரம் டோஸ் மருந்தும் கர்நாடகாவுக்கு விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.

ஆனால் புதன்கிழமை வரை ஜுபிலண்ட் நிறுவனம் 17 ஆயிரத்து 601 டோஸ் மருந்தும், சிப்லா நிறுவனம் 10 ஆயிரத்து 480 டோஸ் மருந்தும் மட்டுமே கர்நாடகாவுக்கு அனுப்பியுள்ளன. இதனால் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோர் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ள‌து.

அலட்சியமான முறையில் செயல்பட்ட இந்த இரு நிறுவனங்களுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் மருந்தை அனுப்பாவிடில் அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல பெங்களூருவில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெங்களூருவில் ஒரு நாளைக்கு 900 படுக்கைகள் காலியாகின்றன. ஆனால் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுக்கை கோரி விண்ணப்பிக்கின்றனர்.

எனவே தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்க‌ளுக்கு மட்டுமே படுக்கை வழங்க முடிவெடுத்துள்ளோம். அடுத்தக்கட்டமாக கர்நாடகாவில் 20 ஆயிரம் படுக்கைகள் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்படும்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in