Published : 12 May 2021 10:19 PM
Last Updated : 12 May 2021 10:19 PM

இஸ்ரேலில் நடந்த வான்வழித் தாக்குதலில் கேரளப் பெண் பலி: உறுதி செய்தது மத்திய அரசு

இஸ்ரேலில், ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சவுமியா(32) பலியானதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் இடையேயான் சர்ச்சைக்குரிய காசா பகுதியிலிருந்து சுமார் 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறும்போது, “திங்கட்கிழமை முதலே ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதுவரை இஸ்ரேலில் 850 ஏவுகணைகளையும், காசா பகுதியில் 200 ஏவுகணைகளையும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவித் தாக்குதல் நடத்தினர். இதில் பல ஏவுகணைகள் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

இந்நிலையில், இஸ்ரேலில் நடந்த ராக்கெட் தாக்குதலில் இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியை தற்போது மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சர் வி.முரளிதரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். காசா அருகே அஷ்கெலான் எனும் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சவுமியா (32) வசித்துவந்துள்ளார். அவர், அங்கு ஒரு வீட்டில் உதவியாளராக இருந்துள்ளார். அப்போது, காசா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் வசித்த வீடும் சிக்கியுள்ளது. இதில் சவுமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளம்பெண் சவுமியாவுக்கு சந்தோஷ் என்ற கணவரும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவரது பூர்வீகம் கேரள மாநிலம் இடுக்கி.

சில ஊடகங்களில் சவுமியா இஸ்ரேலில் ஒரு வீட்டில் செவிலியாக இருந்ததாகத் தெரிவித்தன. ஆனால், அவர் ஒரு மூதாட்டியைக் கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணாக இருந்ததாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

சவுமியாவின் மறைவுச் செய்தியை இடுக்கி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரோஷி அகஸ்டினும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கணவருடன் பேசிக் கொண்டிருந்த போதே நிகழ்ந்த சோகம்:

சவுமியா, இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் தனது கணவர் சந்தோஷுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன்னைச் சுற்றி பல இடங்களிலும் தாக்குதல் நடப்பதாகவும் அச்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் பேசி முடிப்பதற்குள் அவர் இருந்த அறையில் சாம்பல் புகை சூழ்ந்து தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் சந்தோஷுக்கு மனைவி இறந்த செய்தியும் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் சவுமியாவின் கணவர், குடும்பத்தினர் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x