Last Updated : 12 May, 2021 04:11 PM

 

Published : 12 May 2021 04:11 PM
Last Updated : 12 May 2021 04:11 PM

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் 'பிளாக் ஃபங்கஸ்': மகாராஷ்டிரா, ம.பி. ராஜஸ்தான், குஜராத்தில் 'முகோர்மைகோசிஸ்' அதிகரிப்பு

கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்திலும் பிளாக் ஃபங்கஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

பிளாக் ஃபங்கஸ் தொற்று என்றால் என்ன?

பிளாக் ஃபங்கஸ் தொற்று என்பது முகோர்மைகோசிஸ்(mucormycosis.) என அழைக்கப்படுகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையில் மிகவும் மோசமான நிலையின்போது அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால், இந்த தொற்றுக்கு ஆளாகலாம்.

அதிலும் கரோனா வைரஸை எதிர்த்து நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாக செயல்படும்போது சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஸ்டீராய்ட் அளிக்கப்படுகிறது. ஸ்டீராய்ட் மருந்து அதிகளவில் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

இந்த பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயில்லாதவர்களுக்கும் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, பிளாக் ஃபங்கை அதாவது முகோர்மைகோஸிஸ் தொற்றைத் தூண்டிவிடும்.

பாதிப்பு

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த தொற்றால் மூக்கு, மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படும். சில நேரங்களில் கண்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட உடல்உறுப்பையும் நீக்க வேண்டியசூழல் ஏற்படலாம்.

அறிகுறிகள்

இந்த தொற்று ஏற்படும்போது கடும் தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ்பகுதியில் வலி, மூக்கில் நீர்படிதல், சைனஸ் பிரச்சினை, கண்களில் திடீரென பார்வைத் திறன் குறைதல் போன்றவை அறிகுறிகளாகும்.

கரோனா முதல் அலையின்போதே இந்த பிளாக் ஃபங்கஸ் தொற்று இருந்தாலும், பெரிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், 2-வது அலையின்போது பாதிப்பின் அளவு அதிகரித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 13-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப்பிதேச மாநிலம், இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையின் கண்பிரிவு மருத்துவர் ஸ்வேதா வாலியா கூறுகையில் “ பிளாக் ஃபங்கஸ் தொற்றால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று வந்தால் நோயாளியின் மூளை, கண், மூக்கு பாதிக்கப்படும், சிலநேரங்களில் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற வேண்டிய நிலைஏற்படலாம்.

கரோனாவில் பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளவு குறையும்போது இந்த பிளாக் ஃபங்கஸ் ஏற்படுகிறது, இதனால்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இந்த தொற்றால் உயிரிழப்பு 50 சதவீதம் இருக்கிறது. கரோனா நோயாளிகளைக் காக்க ஸ்டீராய்டு மருந்து அதிகம்பயன்படுத்துவதால் இந்த தொற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மத்தியப்பிரதேச மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஷ் கைலாஷ் சாரங் கூறுகையில் “ கரோனாவில் குணமடைந்தவர்கள் பலர் பிளாக்-ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்க வேண்டியது இருக்கும். இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும், தடுக்கவும் அமெரிக்காவில் உள்ள வல்லுநர்களுடன் மருத்துவர்கள் குழு ஆலோசிக்க உள்ளனர்”எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில் “ மகாராஷ்டிராவில் இதுவரை பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2ஆயிரத்தைக் கடந்துள்ளது, தானே மாவட்டத்தில் இருவர் பிளாக் ஃபங்கஸ் நோயால் இறந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கடந்த 12 மணிநேரத்தில் ராஜஸ்தானில் 18 பேரும், ராஞ்சியில் இருவரும், உத்தரப்பிரதேசத்தில் இருவரும், டெல்லி என்சிஆர் பகுதியில் சிலரும் பிளாக் ஃபங்கஸால் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்துள்ளனர். குஜராத்தில் மட்டும் 100 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x