

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் செவிலியரின் மன உறுதி முன்னுதாரணமாகத் திகழ்கிறது என சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் செவிலியர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. கரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில் கடும் பணியாற்றி வரும் செவிலியருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“சர்வதேச செவிலியர் தினம், கோவிட்-19 தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் கடும் உழைப்பாளிகளான செவிலியருக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய அவர்களது கடமை உணர்ச்சி, கருணை மற்றும் மன உறுதி முன்னுதாரணமாகத் திகழ்கிறது” எனக் கூறியுள்ளார்.