Last Updated : 12 May, 2021 02:18 PM

 

Published : 12 May 2021 02:18 PM
Last Updated : 12 May 2021 02:18 PM

கரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட 2 காரணங்கள்: ஐசிஎம்ஆர் தலைவர் விளக்கம் 

இந்தியாவில் பரவிவரும் கரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிக அளவில் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதற்கு 2 காரணங்களை ஐசிஎம்ஆர் அமைப்பின் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா விளக்கியுள்ளார்.

இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா 2-வது அலையில் மக்கள் மிக மோசாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவப் பணியாளர்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என அனைத்தும் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்தியாவின் நிலையைப் பார்த்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

முதல் அலையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் 2-வது அலையில் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிக அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா நேற்று நிருபர்களிடம் விளக்கினார்.

அவர் கூறியதாவது:

''கரோனா 2-வது அலையில் இந்தியாவில் இளம் வயதினர் அதிக அளவில் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கு முதல் காரணம், இளம் வயதினர் வைரஸ் தொற்றுக்கு அதிகமான வாய்ப்பளித்து, வெளியில் அதிகமாக நடமாடுகிறார்கள், கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறிச் செல்லும்போது பாதிக்கப்படுகிறார்கள்.

2-வதாக நாட்டில் தற்போது இருக்கும் உருமாற்ற கரோனா வைரஸ் பரவல். இந்த உருமாற்ற கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரிப்பால் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால்தான் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதேநேரம், வயதான பிரிவினரும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட வாய்ப்பில் இருப்பவர்கள்தான், பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரு கரோனா அலைகளிலும் 70 சதவீதம் நோயாளிகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். இளம் வயதினரைவிட சற்று அதிகரித்துள்ளது.

முதலாவது, 2-வது அலையில் பாதிக்கப்படுவோரின் வயதில் பெரிதாக எந்த வித்தியாசமும் வரவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களிலும் இரு அலைகளிலும் பெரிதாக மாற்றமில்லை. முதல் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9.6 சதவீதம் நோயாளிகள் உயிரிழந்தார்கள். 2-வது அலையில் 9.7 சதவீதம் நோயாளிகள் இறந்துள்ளார்கள்''.

இவ்வாறு பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x