Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

ஜூலைக்குள் 13 கோடி கரோனா தடுப்பூசி உற்பத்தி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி

ஜூலை மாதத்துக்குள் 13 கோடிகரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள தடுப்பூசி,ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்குஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.தற்போது கரோனா தடுப்பூசி போடும்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தி எதிர்பார்த்த அளவை எட்டிவிடும். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தற்போது மாதத்துக்கு 5 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்கிறது. இது ஜூலை மாதத்துக்குள் 6.5 கோடி என்ற அளவை எட்டிவிடும். அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனம் தனது மாத உற்பத்தியை 90 லட்சத்திலிருந்து 2 கோடியாக உயர்த்தியுள்ளது. ஜூலை மாதத்துக்குள் இது 5.5 கோடிஎன்ற அளவை எட்டும்.

மேலும் ரஷ்யாவிலிருந்து டாக்டர்ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மாதத்துக்கு 30 லட்சம் அளவில் கிடைக்கும். அது ஜூலை மாதத்துக்குள் 1.2 கோடி என்றஅளவை எட்டும். இதன்மூலம் ஜூலைமாதத்துக்குள், மாதம் 13 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை எட்டுவோம்.

மேலும் 4 நிறுவனங்கள் பரிசீலனை

மேலும் தடுப்பூசி உற்பத்திக்காக ஒரு தனியார் நிறுவனம், 3 பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் எதிர்பார்க்கப்படும் தடுப்பூசி உற்பத்தி இலக்கைஅடுத்த 6 முதல் 8 மாதங்களில் நாம் பெறுவோம்.

வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. ஏனென்றால் தடுப்பூசி டோஸ்களை குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டியுள்ளது. மேலும்தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களை 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x