Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்வு

கொல்கத்தா

புதிய மேற்கு வங்க பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக நந்திகிராம் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சுவேந்து அதிகாரியை பாஜக ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வதுமுறையாக ஆட்சியை பிடித்துள்ளது. 77 எம்எல்ஏக்களுடன் பாஜக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் பாஜக பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுவேந்து அதிகாரியின் பெயரை ரவிசங்கர் பிரசாத், கட்சியின் தேசிய துணைத் தலைவரும்எம்எல்ஏவுமான முகுல் ராய் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதனை 22 எம்எல்ஏக்கள் வழிமொழிந்தனர். இதையடுத்து பாஜகபேரவை கட்சித் தலைவராகசுவேந்து அதிகாரி ஒருமனதாகதேர்வு செய்யப்பட்டார். இதனைகூட்டத்துக்கு பிறகு ரவி சங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இக்கூட்டத்தில் பேரவை பாஜகவின் தலைமை கொறடாவாக மனோஜ் டிக்கா தேர்வு செய்யப்பட்டார். திரிணமூல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பரில்அக்கட்சியை விட்டு விலகி, பாஜகவில் இணைந்தாரர். நந்திகிராம் தொகுதியில் மம்தாவை 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சுவேந்து அதிகாரி கூறும்போது, “எதிர்க்கட்சித் தலைவராகஎனது கடமையை நிறைவேற்றுவேன். மேற்கு வங்க மக்களின்எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். அரசின் ஆக்கப்பூர்வமாக முயற்சிகளை ஆதரிப்போம். தற்போதைய வன்முறைக்கு எதிராககுரல் கொடுப்போம். மாநிலத்தை வன்முறையில் இருந்து விடுவிப்பதே எனது முதல் கடமையாக இருக்கும்.

இந்த தேர்தலில் புதிய விஷயங்களை நாம் காண்கிறோம். தேர்தலில் தோல்வி அடைந்த முதல்வர்வேட்பாளர் ஒருவர் (மம்தா) முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இவ்வாறு பதவியேற்றது மேற்குவங்கத்துக்கு இதுவே முதல்முறையாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x