

டெல்லியில் எஸ்யுவி, செடான் ரக கார்களுக்கு தடை விதிப்பதுடன், பசுமை வரியும் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. இதுகுறித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. அதை தடுக்கும் முயற்சி களில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டெல்லியில் நுழை யும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.700-ம், கனரக சரக்கு வாகனங் களுக்கு ரூ.1300-ம் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கார் டீலர்கள் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி சுதந்திர குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் புதன் கிழமைக்குள் பதிலளிக்கும்படி நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
இதற்கிடையே, டெல்லி அரசு சார்பில் ஒற்றை, இரட்டை இலக்க எண் கொண்ட தனியார் கார்களை மாற்று நாட்களில் இயக்க அனுமதிக்கும் முறை வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘டெல்லி அரசின் இந்த பரிசோதனை முயற்சி பலனளிக்குமா என்பது தெரியவில்லை. பலனளித்தால் தொடரலாம்’ என்று தெரிவித்தனர்.
மேலும், பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் எஸ்யுவி ரக கார்களுக்கும் செடான் ரக கார்களுக்கும் தடை விதிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினர். டெல்லி அரசு வசூலித்து வரும் பசுமை வரியை இரட்டிப்பாக்குவது குறித்தும் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள் ளது. அப்போது 2000 சிசி மற்றும் அதைவிட திறன்வாய்ந்த எஸ்யுவி மற்றும் செடான் ரக டீசல் கார் களுக்கு தடை விதிப்பது குறித்தும் பசுமை வரியை ரூ.700-ல் இருந்து ரூ.1400 ஆகவும், ரூ.1300-ல் இருந்து ரூ.2600 ஆகவும் உயர்த்துவது குறித்தும் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.