

தெலங்கானாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு நாளை முதல் வரும் 22ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று உத்தரவிட்டார்.
காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே மக்களுக்குத் தளர்வுகள் தரப்படும். அதற்குள் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து நேற்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அளவில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் லாக்டவுன் கொண்டுவருவது அவசியம் என அதிகாரிகள் தரப்பில் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10 நாட்கள் லாக்டவுனை முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், “மாநிலத்தில் லாக்டவுனை அமல்படுத்தினால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும். பகுதி லாக்டவுனையோ அல்லது முழு லாக்டவுனையோ அமல்படுத்த மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் கூறுகையில், “லாக்டவுன் அமல்படுத்துவது குறித்துப் பல்வேறு கருத்துகளும், கேள்விகளும் எழுந்தன. பல மாநிலங்களில் லாக்டவுன் கொண்டுவந்தபோதிலும் கரோனா பாதிப்பு குறையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மற்றொரு தரப்பினர் லாக்டவுனுக்கு ஆதரவாக இருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டது
லாக்டவுனில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள், தளர்வுகள், விதிவிலக்குகள் உள்ளிட்டவை குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.