

உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்தபோதும், தடுப்பூசியை இரு நிறுவனங்கள் மட்டும் தயாரிக்கக் காரணம் என்ன என்று மத்திய அரசுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நரேந்திர மோடி அரசின் தடுப்பூசிக் கொள்கை என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளான மக்களின் வாழ்வாதார உரிமையை மீறுவதாக இருக்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. அதனால்தான், தடுப்பூசிக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது எனத் தெரிவிக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை மாநிலங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால், ஆக்சிஜனின் முழுமையான கட்டுப்பாடும் மத்திய அரசிடம் இருக்கிறது. மக்கள் போதுமான அளவு ஆக்சிஜனைப் பெற முடியவில்லை. ரெம்டெசிவிர் மருந்தைப் பெற முடியவில்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களால் தடுப்பூசியைக் கூடப் பெற முடியவில்லை.
மத்திய அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தைத் தயாரிக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் மருந்து தயாரிப்பின் தலைநகராக இந்தியா இருந்தபோதிலும், தடுப்பூசியை இரு நிறுவனங்கள் மட்டும் தயாரிப்பது ஏன்?
மத்திய அரசு மக்களோடு நேரடியாகத் தொடர்பில்லாமல் இருப்பதால்தான் மக்கள் சிரமப்படுகிறார்கள். கரோனா 2-வது அலை வரப்போகிறது என்று நம்முடைய விஞ்ஞானிகளே எச்சரித்தும், மத்திய அரசு தூங்கிவிட்டது, தோல்வி அடைந்துவிட்டது.
கடந்த 3 வாரங்களாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கிறார்கள். கல்லறைகளில் நிறைய மக்களின் உடல்கள் காத்திருக்கின்றன. நரேந்திர மோடி அரசு தனது தவறை ஒப்புக்கொண்டு, கரோனா 2-வது அலையைத் தடுக்க முடியவில்லை எனக்கூறி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஏன் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதிக்கிறது. ஆக்சிஜனை உங்களால் வழங்கமுடியாதபோது, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை வசூலிக்கக் கூடாது''.
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.