Last Updated : 11 May, 2021 02:44 PM

 

Published : 11 May 2021 02:44 PM
Last Updated : 11 May 2021 02:44 PM

தடுப்பூசி தயாரிப்பு ஃபார்முலாவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்: கடும் தட்டுப்பாட்டால் மத்திய அரசிடம் கேஜ்ரிவால் கோரிக்கை

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பூசி தயாரிப்பை மத்திய அரசு பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ், இரண்டாம், மூன்றாம் அலைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது அலையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.

இந்நிலையில் மே 1 முதல் 18 வயது முதல் 45 வயது வரையிலான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. எனினும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தேவையுள்ள நபர்களுக்குக் கூட முழுமையாகத் தடுப்பூசி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்தியாவில் 9.7% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் 2 நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. அந்த நிறுவனங்களால் ஒரு மாதத்துக்கு 6 முதல் 7 கோடி தடுப்பூசிகளை மட்டுமே தயாரிக்க முடியும். இந்த வகையில் சென்றால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். அதற்குள் பல அலைகள் வந்துவிடும். எனவே தடுப்பூசி தயாரிப்பை அதிகரித்து அதற்கான தேசிய திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம்.

இதற்கான ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசிகளைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து, தயாரிப்பு ஃபார்முலாவை மத்திய அரசு பெற்று, பிற நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்.

கடினமான இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு இதற்கான அதிகாரம் உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

டெல்லியில் தினந்தோறும் 1.25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் தினமும் 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்குவோம். 3 மாத காலத்துக்குள் அனைத்து டெல்லிவாசிகளுக்கும் தடுப்பூசியைச் செலுத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். எனினும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பில் உள்ளது''.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x