

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரும், கேரளாவின் முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான கே.ஆர்.கவுரி அம்மா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 102.
கேரளாவில் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் 1957ஆம் ஆண்டு உருவான முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசில் கவுரி அம்மா அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கவுரி அம்மா, இன்று காலை 7 மணிக்கு காலமானார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1919ஆம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமமான பட்டனக்காட்டில், கே.ஏ.ரமணன், பார்வதி அம்மா தம்பதிக்கு கவுரி அம்மா மகளாகப் பிறந்தார்.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் நிறைந்தவராக கவுரி அம்மா இருந்தார். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சியில் கவுரி அம்மா சேர்ந்து, கட்சியை வளர்க்கும் பொறுப்பில் இணைந்தார். தனது கருத்துகளைத் தெளிவாகவும், விமர்சனங்களை மிகக்கூர்மையாகவும் எடுத்து வைக்கும் திறமை கொண்ட கவுரி அம்மா, திருவிதாங்கூர் கொச்சின் சட்டப்பேரவையில் 1952, 1954 சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரள அரசியலில் பெண் அரசியல் தலைவர்களில் மிகவும் சக்தி மிக்கவராக கவுரி அம்மா திகழ்ந்தார். கேரளாவின் முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர்களில் இதுவரை உயிரோடு இருந்தவரும் கவுரி அம்மாதான்.
இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கவுரி அம்மா, கேரளாவில் புரட்சிகரமான அளவில் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். அதன்பின் 1980களில் இ.கே.நாயினார் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்து, நாட்டிலேயே முதன்முறையாக தகவல் தொழில்நுட்பப் பூங்காவை கவுரி அம்மா அமைத்தார்.
1994ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கட்சி விரோதச் செயல்பாட்டால் கவுரி அம்மா நீக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதிய சம்ரக்ஸ்சனா சமிதி (ஜேஎஸ்எஸ்) எனும் கட்சியைத் தொடங்கி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டார். 2016ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் இடதுசாரி அணியில் ஜேஎஸ்எஸ் கட்சி சேர்ந்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த டி.வி.தாமஸ் என்பவரை கவுரி அம்மா திருமணம் செய்தார். 1964ஆம் ஆண்டு சித்தாந்தரீதியாக கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, கவுரி அம்மா, தனது கணவர் சார்ந்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்லவில்லை. தான் கொள்கைப் பிடிப்புடன் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே கவுரி அம்மா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுரி அம்மா மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் முகமது ஆரிஃப்கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.