

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கும்பமேளாவை நடத்தினீர்கள், அதன்பின்அடுத்தடுத்து மத நிகழ்வுகளை நடத்த எவ்வாறு அனுமதிப்பது, எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டிருக்க முடியாது என்று உத்தரகாண்ட் அரசை மாநில உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பமேளா திருவிழா நடந்தது. ஏறக்குறைய 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மாதத்தில் பங்கேற்றனர். நாட்டில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துவந்த நிலையில் கும்பமேளாவில் மக்கள் கூட்டமாகக் கூடியது பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த கும்பமேளாவுக்கு வந்து சென்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து மதநிகழ்வுகளை நடத்த உத்தரகாண்ட் தயாராகி வருவதாகவும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது, எவ்வாறு தயாராகியுள்ளது என்பதை அறிய பொதுநலன் வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான், நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞரையும், சுகாதாரத்துறை செயலாளர் அமித் நெகியையும் நீதிபதிகள் கடுமையாகச் சாடி பல்வேறு கிடுக்கிப்படி கேள்விகளை எழுப்பினர்.
நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ மாநிலத்தில் கரோனா அதிகரிப்பைப் பார்த்து நாங்கள் எதையும் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது. எங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்ட ஏதும் நடக்காதது போல் செயல்பட முடியாது.
கடந்த ஓர் ஆண்டாகியும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசு ஏன் முழுமையாகத் தயாராகவில்லை. இதில் 3-வது அலை வரலாம் எனவும் மத்தியஅரசு எச்சரித்துள்ளது.
கும்பமேளா திருவிழாவின் பாதிப்பிலிருந்து இன்னும் மாநிலம் மீளவில்லை. அதற்குள் புர்னாகிரி மேளா நடந்து, அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ளார்கள். கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்கு இதுபோன்ற திருவிழாக்கள் காரணமா.
இதில் ஆண்டு தோறும் நடக்கும் சர்தாம் யாத்திரையையும் நடத்துவதில் மாநில அரசு தயாராகி வருகிறது. இந்த திருவிழாவில் மக்களை அனுமதித்தால், கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும்” எனத் தெரிவித்தனர்.
அதற்கு அரரசு தரப்பில் பதில் அளிக்கையில் “ சர்தாம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. கோயில்களை பராமரிக்கும் மேலாண்மை நிர்வாகம், பாதுகாப்பு வழிமுறைகளை யாத்திரைக்காக வெளியிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதிகள் அமர்வு “ நீங்கள் வகுத்த பாதுகாப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவார்கள் என எவ்வாறு உறுதியளிக்க முடியும். இதேபோன்றுதான் கும்பமேளாவில் சொன்னீர்கள், ஆனால், பாதுகாப்பு வழிமுறை பின்பற்றப்பட்டதா. கரோனா வைரஸ் பரவல்அதிகரித்து வரும்போது எவ்வாறு மதநிகழ்வுகளை அனுமதிப்பது.
மாநிலத்தின் அனைத்து வளங்களையும் ஒன்றாக இணைத்து கரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் போர் செய்து வருகிறோம், அனைத்து சக்திகளையும் திரட்டி போராட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன்படி குடிமக்களின் உயிரைக் காப்பது அரசின் கடமை. ஒவ்வொரு சொட்டு உழைப்பையும் அரசு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
மாநில அரசு தரப்பில் கரோனா பரவலைச் சமாளிக்க எவ்வாறு அரசு தயாராகியுள்ளது, மாநிலத்தில் மருத்துவமனைகள் நிலை, படுக்கை வசதிகல், ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதிகள் அமர்வு, “ கரோனா 2-வதுஅலையின் உச்சம் இன்னும் மாநிலத்துக்கு வரவில்லை.மாநில அரசு முன்னெச்சரிக்கை தயாரிப்பு வேகம் போதாது. 3-வது அலையை மக்களும், அரசும் சேர்ந்து பணியாற்றி முறியடிக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும், குறிப்பாக கரோனா ஹாட்ஸ்பாட் மையங்களான ஹரித்துவாரில் பரிசோதனை மையங்களை உருவாக்கலாம். கிராமப்புறங்களில் மொபைல் டெஸ்டிங் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.