

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் 11 பேர் நேற்று உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆக்சிஜன் தீர்ந்தபின் வேறு சிலிண்டர்களை மாற்றும்போது ஏற்பட்ட கோளாறால் சிறிது நேரம் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பதியில் நகரில் ரூயா என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ரூயா மருத்துவமனையில் ஐசியு வார்டில் மட்டும் 700 கரோனா நோயாளிகளும், 300 நோயாளிகள் சாதாரண வார்டிலும் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் திடீரென தீர்ந்ததால் மாற்று சிலிண்டர்களை இணைப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து வரும் பிரஷர் (அழுத்தம்) குறைவாக இருந்ததால், போதுமான அளவு நோயாளிகளுக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதனால், நேற்று இரவு அடுத்தடுத்து 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் சப்ளையில் திடீெரன கோளாறு ஏற்பட்டவுடன் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஐசியு வார்டுக்குச் சென்று சிகிச்சை அளித்தபோதிலும் 11 பேர் உயிரிழந்தனர். உறவினர்கள் தரப்பில் கூறுகையில் 45 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் சப்ளையில் தடை ஏற்பட்டதால்தான் உயிரிழப்பு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், சித்தூர் மாவட்ட ஆட்சியர் எம். ஹரி நாராயணன் கூறுகையில் “ ரூயா மருத்துவமனையில் ஆயிரம் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் சப்ளையில் 5 நிமிடங்கள் மட்டுமே தடை ஏற்பட்டுள்ளது மற்றவகையில் எந்தச் சிக்கலும் இல்லை.
அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது, மருத்துவர்களும், செவிலியர்களும் விரைவாகச் செயல்பட்டதால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதும் மற்றொரு காரணம்” எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரு நாட்களில் இது 2-வது சம்பவமாகும். கடந்த 2 நாட்களுக்கு முன் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளையில் தடை ஏற்பட்டதால், அரசு மருதத்துமனையில்சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.