Published : 24 Jun 2014 03:51 PM
Last Updated : 24 Jun 2014 03:51 PM

விஷ்ணு அவதார சர்ச்சை வழக்கு: தோனியை கைது செய்ய ஆந்திர நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியை கைது செய்ய ஆணை பிறப்பித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தியது தொடர்பான வழக்கில் அவருக்கு ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் 2013 ஏப்ரல் மாத பிரதியின் அட்டைப்படத்தில் தோனி இந்துக் கடவுள் விஷ்ணு அவதாரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தார்.

"God of Big Deals" - என்ற உபத் தலைப்பு அந்தப் படத்திற்கு கொடுக்கப்பட்டிருந்தது. விஷ்ணு அவதாரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த தோனியின் கைகளில் ஷூ உள்பட பல்வேறு பொருட்களை வைத்திருந்தது போல் இருந்தது.

இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒய்.ஷியாம் சுந்தர், தோனி இந்துக் கடவுளை தரம் தாழ்த்தி இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தியதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தோனி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் தோனி ஆஜராகவில்லை. இந்நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அனந்தபூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதே சர்ச்சை தொடர்பாக தோனி மீது டெல்லி, புனே உள்ளிட்ட நகரங்களிலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x