

கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்கப்படுவதை தடுப்பது மாநில அரசுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்கப்படுவதை மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சிறப்புக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும். நாடு முழுவதும் 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.