கரோனா தடுப்பூசி கொள்கையில் நீதித் துறை தலையிட கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

கரோனா தடுப்பூசி கொள்கையில் நீதித் துறை தலையிட கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்
Updated on
2 min read

கரோனா தடுப்பூசி கொள்கையில் நீதித் துறை தலையிட கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், நாகஸ்வர ராவ், ரவீந்திர பட் அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, "அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவில் கரோனா தடுப்பூசி விலை அதிகமாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிக்க கூடாது. மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே 100 சதவீத கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு சரிசமமாக விநியோகம் செய்யலாம்" என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பூசி கொள்கை யில் நீதித்துறை தலையிட கூடாது. இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். மூத்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், நிபுணர்களின் ஆலோசனைபடி தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.

தடுப்பூசி கொள்கையில் மாநில அரசுகள், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் நட வடிக்கைகளில் நீதித்துறை தலையிடுவது பொருத்தமாக இருக்காது. தடுப்பூசிகளின் இருப்பு, வயது முன்னுரிமை அடிப்படையில் திட்டம் செயல்படுத் தப்படுகிறது.

மேலும் தடுப்பூசி உற்பத்திக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு காப்புரிமை வழங்கினாலும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியாது.

நாட்டில் 7 நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தினை உற்பத்தி செய்ய உரிமம் பெற்றுள்ளன. தற்போது கூடுதலாக 35 நிறுவனங்களுக்கு காப்புரிமை வழங்கியுள்ளோம். இதன்மூலம் ஒரு மாதத்துக்கு ஒரு கோடி ரெம்டெசிவிர் மருந்தினை உற்பத்தி செய்ய முடியும். மேலும் எகிப்தில் இருந்து 3 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. தவிர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1.25 லட்சம் ரெம்டெசிவிர் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், நாகஸ்வர ராவ், ரவீந்திர பட் அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமை இரவு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு திங்கள்கிழமை காலை எங்கள் கைகளுக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே ஊடகங்களில் மனுவின் முழுவிவரங்களும் வெளியாகி உள்ளன. இதற்கு யார் காரணம்" என்று கண்டித்தனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா பதில் அளித்தபோது, "மத்திய அரசு மனுவின் நகல் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து ஊட கங்களுக்கு தகவல் கசிந்திருக் கலாம்" என்று தெரிவித்தார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சர்வர் பிரச்சினை காரணமாக நேற்று விசாரணையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in