Published : 10 May 2021 07:41 PM
Last Updated : 10 May 2021 07:41 PM

கையிருப்பு 86 மெட்ரிக் டன் மட்டுமே; தமிழகத்துடன் இனியும் பகிர இயலாது: கூடுதல் ஆக்சிஜன் கேட்டு பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்

மொத்தம் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் அதனை அண்டை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும், மத்திய தொகுப்பிலிருந்து தங்களுக்கு உடனடியாக கூடுதலாக ஆக்சிஜன் வேண்டுமெனவும் வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

கரோனா இரண்டாவது அலையில், நாடு முழுவதும் அன்றாடம் 4 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில். மத்திய ஆக்சிஜன் குழுமம், மாநிலங்களுக்கு இடையேயான ஆக்சிஜன் பகிர்தலைக் கண்காணித்து உறுதி செய்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சென்று சேர்வதை இந்தக் குழு உறுதி செய்கிறது.

அதன்படி நாளொன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்குமாறு கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தங்களிடன் வெறும் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் அதனை அண்டை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும், தங்களுக்கு உடனடியாக கூடுதலாக ஆக்சிஜன் வேண்டுமெனவும் வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், மத்திய அரசின் உத்தரவுக்கிணங்கி இன்று (மே 10) மட்டுமே அண்டை மாநிலமான தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க முடிந்தது எனவும் அக்கடிதத்தில் முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் தற்போது 4,02,640 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 15ம் தேதிக்குள் 6,00,000 என அம்மாநில மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வேகமாகக் கரோனா பரவி வரும் நிலையில் மாநிலத்துக்குக் கூடுதலாக 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக பிரதமருக்கான கடிதத்தில் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேரள மாநிலத்துக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்வதில் ஐநாக்ஸ் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் அமைந்துள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அன்றாடம் 150 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. இன்னும் சில சிறிய மையங்களில் உற்பத்தியாகும் அளவையும் சேர்த்தால் கேரளாவில் அன்றாடம் 219 MT ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தில் உள்ள இரும்புத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மடைமாற்றிவிட்டால் இதைவிட சற்றே கூடுதல் அளவில் ஆக்சிஜனைப் பெறமுடியும்.

இந்நிலையில், வெறும் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மாநில முதல்வர் கவலை தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, கேரள மாநிலத்தில் எப்போதும் 450 மெட்ரிக் டன் பஃபர் இருப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் போன்ற அண்டை மாநிலங்களின் தேவை அதிகரித்ததால் கையிருப்பு அளவு குறைந்து வந்தது.

இந்நிலையில் தான், குறைந்த கையிருப்புடன் யாருக்கும் உதவிக்கரம் நீட்ட முடியாது என்றும் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து உடனடியாக கேரளாவுக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

மே 15ம் தேதிக்குள் கேரளாவுக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் ஆக்சிஜனை கேரளாவுக்கு கண்டெய்னர்கள் மூலம் கொண்டு வருவதையும், இல்லை க்ரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் ரயில்களில் கொண்டு வருவதையும் மத்திய அரசே ஒருங்கிணைத்துத் தர வேண்டும் என்றும் முதல்வர் பினராயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x