

கரோனாவை விரட்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேகப் பூஜை இன்று நடத்தினார். கரோனா தொற்றிலிருந்து குணமான இவர் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரில் இப்பூசையை சுமார் ஒரு மணி நேரம் நடத்தினார்.
கரோனாவின் இரண்டாவது பரவல் நாடு முழுவதிலும் பல உயிர்களை பலியாக்கி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலமும் இதில் அதிக பாதிப்பை அடைந்துள்ளது.
இங்கு பாஜக ஆளும் முதல்வரான யோகி, அவரது துணை முதல்வர் தினேஷ் சர்மா ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால், தனிமையில் வீட்டிலிருந்தபடியே இருவரும் தம் நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.
இதில், தற்போது குணமான முதல்வர் யோகி, தன் சொந்த மாவட்டமான கோரக்பூருக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று வந்திருந்தார். அப்போது, அங்குள்ள கோரக்நாத் கோயில் மடத்திலிலுள்ள தனது வீட்டில் கரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்தினார்.
சிவனுக்கு ருத்ராபிஷேகப் பூஜை நடத்தினார். அதற்கான வேத மந்திரங்களை பண்டிதர்கள் ஓத, 11 லிட்டர் பாலாபிஷேகம் சிவலிங்கத்திற்கு நடத்தப்பட்டது.
அருகம்புல்லின் சிறப்பு நீரும் ஐந்து லிட்டர் அளவில் அபிஷேகம் செய்யப்பட்டது. மற்றொரு கடவுளான விநாயகரை வணங்கி துவக்கப்பட்ட இப்பூஜைக்கு கோரக்நாத் மடத்தின் தலைமை பண்டிதரான ராமானுஜம் திரிபாதி தலைமை தாங்கினார்.
கரோனாவை விரட்ட நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜைக்கு பின் முதல்வர் யோகி மடத்திலுள்ள கோசாலைக்கும் சென்றார். அங்கிருந்த பசுக்களை வணங்கி அவைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.
பெரிய மாநிலமான உ.பி.யின் முதல்வராக தனது பொன்னான நேரத்தில் சுமார் அரை மணி நேரம் கோசாலையில் முதல்வர் யோகி செலவிட்டிருந்தார். தற்போது கரோனாவிற்காக கோரக்நாத் மடத்தின் கோயில் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் எவரும் இன்றி அமைதியான சூழல் காணப்பட்டது. இதில், முதல்வர் யோகி தனிமையில் நடத்திய சிறப்பு ரூத்ராபிஷேகப் பூசையால் கரோனா விரட்டியடிக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.