

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் 43 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சில மூத்த அமைச்சர்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நேரடியாக வராமல் காணொலி மூலம் பதவி ஏற்றனர்.
292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தாலும், முதல்வராக கடந்த 5-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் 19 இணையமைச்சர்கள் உள்பட 43 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றனர். ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த நிகழச்சியில் அமைச்சர்களுக்கு ஆளுநர் தனகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முன்னாள் நிதி அமைச்சர் அமித் மித்ரா, பிரத்யா பாசு, ரதின் கோஷ் ஆகியோர் காணொலி மூலம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், மூத்த அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, பர்தா சாட்டர்ஜி, பிர்ஹத் ஹக்கிம், ஜோதி பிரியா மாலிக், மோலோய் காடக், அரூப் பிஸ்வாஸ், மருத்துவர் சசி பான்ஜா, ஜாவித் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
பதவி ஏற்பு விழா முடிந்தபின், இன்று பிற்பகல் அல்லது மாலையில் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டுவார் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில்தான் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன