

’தி இந்து’வில் கடந்த டிசம்பர் 6 -ம் தேதி வெளியான செய்தியின் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து இலவசமாக நிவாரணப் பொருட்களை ரயிலில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவது குறித்து ‘வெளிமாநில நிவாரணப் பொருட்களுக்கு போக்குவரத்து வசதி கோரப்படுமா?’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது. இதை மனதில் கொண்ட தமிழக அரசு இது குறித்த கோரிக்கையை உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
தமிழக அரசின் கோரிக் கையை மத்திய உள்துறை அமைச்சகம் தனது கீழ் செயல்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதை தொடர்ந்து அந்த ஆணையம் கேட்டுக் கொண்டதன் பேரில் ரயில்வே துறை அமைச்சகம் ஓர் உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும் கூடுதல் இயக்குநர் ஜெனரலுமான அனில் குமார் சக்சேனா கூறுகை யில், ‘நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் தமிழகத் துக்கு நிவாரணப் பொருட்களை ரயில்களில் இலவசமாக அனுப்பி வைக்கலாம்.
இந்த பொருட்கள் மாவட்ட ஆட்சியர், சென்னை எனும் பெயரில் இருக்க வேண்டும்’ என்றார்.