டெல்லியில் எம்.பி.க்களுக்கான மின்சார பஸ் வசதியை மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் எம்.பி.க்களுக்கான மின்சார பஸ் வசதியை மோடி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் சூரிய சக்தியின் பயன்பாடு மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவரும் நிலையில், நாடாளுமன்றம் வந்து செல்லும் எம்.பி.க்களின் பயன்பாட்டுக்காக முதல்முறையாக பேட்டரியால் இயங்கும் மின்சாரப் பேருந்து நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்தப் பேருந்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பேருந்தின் சாவியை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். பின்னர் பேருந்து சேவையை பிரதமர் தொடங்கி வைத்து அதில் சிறிது தூரம் பயணம் செய்தார்.

பேருந்து சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

சுற்றுச்சூழல் மாசு குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறோம். என்றாலும் இயல்பான மனித வாழ்க்கையில் அதன் எதிர்மறை விளைவுகளை கடந்த சில ஆண்டுகளாகவே உணர்கிறோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய சவாலான பணி மனித குலத்தின் முன் உள்ளது.

பருவநிலை மாறுபாடு தொடர்பான உச்சி மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அண்மையில் நடந்தது. இதில் மேற்கொள்ளப்பட்ட 2 முக்கிய முயற்சிகள் குறித்து இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

உலகின் 122 நாடுகள் சூரிய ஒளியை ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் மேல் பெறுகின்றன. இந்த நாடுகளைக் கொண்ட அமைப்பு, இந்தியாவின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படும்.

புதைபடிம எரிபொருளுக்கான மாற்று குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட உலகத் தலைவர்கள் பிரான்ஸ் மாநாட்டில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வுக்கான முயற்சிகளை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுடன் இணைந்து இந்தியா தொடங்கியுள்ளது. இதில் பில்கேட்ஸ் அறக்கட்டளையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இது நல்ல பலனைத் தரும் என நம்புவோம்.

இந்தப் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் சுற்றுச் சூழல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு அமைச்சர் நிதின் கட்கரியின் பங்களிப்பை பாராட்டுகிறேன். இந்த தொழில்நுட்பத்தை பொதுமக்கள் போக்குவரத்திலும் பயன்படுத்த முடியும்.

சுற்றுச்சூழல் மாசுவை இத்தகைய பேருந்துகள் மிகவும் குறைப்பது மட்டுமின்றி, பேட்டரி தயாரிப்பு ஆய்வுப் பணியில் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும்.

பேட்டரி ஆயுளை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு அவசியம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அது நம் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in