

கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டில் கரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாகி உள்ளது. இதனால் நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்
பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக வருவோருக்கு தேவையான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ரெம்டெசிவிர் மருந்துகள், வென்டிலேட்டர் வசதி இல்லாமல் மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன. சிகிச்சைக்காக மக்கள் தங்களது நிலங்கள், நகைகளை
விற்றும், சேமித்து வைத்த பணத்தை செலவழித்தும் வருகின்றனர். இந்நிலையில் கரோனா பிரச்சினையை எதிர்த்துப் போராட 6
யோசனைகளை நான் தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை. எனவே இந்த விஷயத்தில் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பிரதமர் கையாளவேண்டும்.
மேலும் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து ஆலோசிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டவேண்டும்.அதுமட்டுமல்லாமல், கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியில், அனைத்து
மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் (பிபிஇ), ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான மத்திய அரசின் வரிகளை நீக்கவேண்டும்.
வெளிநாடுகளில் இருந்த வந்தமருத்துவ நிவாரணப் பொருட்களை உடனடியாக தகுந்த இடங்களுக்கு விநியோகம் செய்யவேண்டும்.
மேலும் வேலை இல்லாதோருக்கு உதவும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தவேண்டும். இவ்வாறு அதில் கார்கே கூறியுள்ளார்.