

வரலாற்றில் முதன் முறையாக இந்திய ராணுவத்தின் ‘காலாட் படை போலீஸ்' பிரிவில் (மிலிட்டரி போலீஸ்) 83 பெண்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தில் காலாட் படை, விமானப்படை, கடற்படை ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இந்தப் படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளில் மட்டும் 1990-களில் தொடங்கி பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனினும், களப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்தாமல் ‘அதிகாரி நிலை' பதவிகளில் மட்டுமே பெண்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நம் நாட்டின் முப்படைகளில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக இந்திய ராணுவத்தின் அதிகாரி நிலை பதவி அல்லாத ‘காலாட்படை போலீஸ்' பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 61 வாரங் கள் கடுமையான பயிற்சிக்கு பிறகு பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் முறைப்படி ராணுவத்தில் இணைக்கப்பட்டனர்.
இனி ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் மொத்தம் 800 பேரை 'காலாட்படை போலீஸ்' பிரிவில் இணைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.